இலவச வீட்டுமனை பட்டாவை அளவீடு செய்து வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டாவை அளவீடு செய்து வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-09-13 17:52 GMT
அரியலூர்
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வாணதிரையான்பட்டினம் கிழக்கு காலனி தெரு மக்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 2007 ஆண்டு 98 பேருக்கு  இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்த வீட்டுமனை பட்டாவை 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அளவீடு செய்து வழங்காததை கண்டித்து பொதுமக்கள், அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் வாணதிரையான்பட்டினம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அன்புசெல்வன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், மொத்தம் 5 பேரிடம் இருந்து அரசு இழப்பீடு கொடுத்து நிலங்களை வாங்கிதான் தங்களுக்கு பட்டா நிலம் வழங்கப்பட்டது. இதில் 3 பேர்  கோர்ட்டுக்கு சென்று தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்றுள்ளனர். இந்த நிலையில் மீதம் உள்ள 2 பேரின் நிலைத்தை தங்களுக்கு பிரித்து கொடுக்க மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு வந்தஉடன் நிலத்தை அளவீடு செய்து தருகிறோம் என்றார். பேச்சுவார்த்தையின்போது உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முக சுந்தரம் உடனிருந்தார்.  
இதனை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னதுரை கூறுகையில், தொடர்ந்து இடம் அளவீடு செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள் வருகிறார்கள்.  ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒரு வாரத்திற்குள் தீர்வு கூறுவதாக சொல்லி அனுப்பி வைத்து விடுகின்றனர். ஆனால் அதற்கான தீர்வு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை கிடைக்கவில்லை. தற்போது  அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் அளவீடு செய்யவில்லை என்றால் அடுத்த வாரம் ஆதி திராவிடர் வட்டாட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் நடைபெறும் என்றார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலைந்துசென்றனர். 

மேலும் செய்திகள்