காவிரி ஆற்றுப்பாலத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

தவிட்டுப்பாளையம் அருகே காவிரி ஆற்றுப்பாலத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், 2 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Update: 2021-09-13 18:19 GMT
நொய்யல், 
சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது
குளித்தலை பெரியார் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 44), டிரைவர். இவர் குளித்தலை பகுதியிலிருந்து வேலாயுதம்பாளையம் வழியாக தனது சரக்கு ஆட்டோவில் சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப்பாலத்தில் சென்றபோது சரக்கு ஆட்டோவின் முன்பக்க டயர் கழன்று விழுந்தது. இதில் சரக்கு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று பாலத்தின் குறுக்கே கவிழ்ந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சரக்கு ஆட்டோவில் வந்த டிரைவரும், உடன் வந்தவரும் காயமின்றி உயிர் தப்பினர். சரக்கு ஆட்டோ‌ காவிரி ஆற்றுப்பாலத்தின் குறுக்கே கவிழ்ந்ததால் மதுரை, கரூர், கொடுமுடி, அரவக்குறிச்சி மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, சேலம் செல்லும் அனைத்து வாகனங்களும் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிர்வழியாக புதிய பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மதுரையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பஸ்கள், லாரிகள், கார்கள் வேன்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நின்றதால் பொதுமக்களும், பயணிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
சர்க்கரை மூட்டைகள்
இதையடுத்து சரக்கு ஆட்டோவை தூக்குவதற்கு எந்திரம் வரவழைக்கப்பட்டு சரக்கு ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தினர். பின்னர் கீழே விழுந்த சர்க்கரை மூட்டைகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றி பின்னர் பழைய பாலத்தின் வழியாக அனைத்து வாகனங்களும் செல்ல வழிவகை செய்தனர். 
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்