பரமத்திவேலூர் காவிரி பாலத்தில் மினிவேன் கவிழ்ந்தது ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பரமத்திவேலூர் காவிரி பாலத்தில் மினிவேன் கவிழ்ந்ததால், அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-09-13 18:23 GMT
பரமத்திவேலூர்:
மினிவேன் கவிழ்ந்தது
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் இடையே காவிரி ஆற்றில் இரட்டை மேம்பாலங்கள் உள்ளன. இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பிரதான சாலையாக உள்ள அதில் நேற்று மாலை கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து சர்க்கரை பாரம் ஏற்றிக்கொண்டு மினிவேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இதனை குளித்தலை பெரியார்நகரை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 44) என்பவர் ஓட்டி வந்தார். திடீரென இந்த மினிவேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறக ஓடியது. பின்னர் தடுப்பு சுவரில் மோதி சாலையின் நடுவில் கவிழ்ந்தது. இதனால் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு...
சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. விபத்து குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்து கிடந்த மினிவேன் மீட்கப்பட்டு, சாலையோரம் நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். சுமார் ஒரு மணி நேரம் காவிரி பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பயணிகள் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்