பழனி முருகன் கோவிலில் அலகு குத்தி வேனை இழுத்த 75 வயது பக்தர்

உலக நலன் வேண்டி, பழனி முருகன் கோவிலில் 75 வயது பக்தர் முதுகில் அலகு குத்தி கிரிவீதிகளில் வேனை இழுத்தார்.

Update: 2021-09-13 20:50 GMT
பழனி: 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. 

கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிகாலை முதலே அடிவாரம், திருஆவினன்குடி கோவில், மலைக்கோவிலில் பக்தர்கள் வருகை அதிகம் காணப்பட்டது. அதேபோல் ஏராளமான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தினர்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள அத்தன்வலசு கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்பணநாடார் (வயது 75). இவர் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். 

பின்னர் அவர் உலக நலன் வேண்டி முதுகில் அலகு குத்தி அடிவாரம் பாதவிநாயகர் கோவில் பகுதியில் இருந்து வேனை இழுத்து கிரிவீதியை சுற்றி வந்தார். அப்போது மயில்காவடி எடுத்தும் ஆடினார். இதைக்கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கொரோனா அச்சுறுத்தல் நீங்கி, உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அலகுகுத்தி வழிபட்டதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்