சி.எம்.உதாசி எம்.எல்.ஏ. உள்பட 32 பிரமுகர்கள் மறைவு: கர்நாடக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்

கர்நாடக சட்டசபை மற்றும் மேல்-சபையில் சி.எம்.உதாசி எம்.எல்.ஏ. உள்பட 32 முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

Update: 2021-09-13 21:04 GMT
பெங்களூரு:

மழைக்கால கூட்டத்தொடர்

  கர்நாடக சட்டசபை கூட்டம் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜூலை மாதம் நடைபெற வேண்டிய சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் 6 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியது.

  கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் காகேரி, மறைந்த பா.ஜனதாவை சேர்ந்த சி.எம்.உதாசி எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஸ்ரீகிருஷ்ணா, முன்னாள் மத்திய மந்திரி பாபாகவுடா பட்டீல், முன்னாள் மந்திரியும், காவிரி போராட்ட குழு தலைவருமான மாதேகவுடா, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங், விளையாட்டு வீரர் மில்காசிங், பழம்பெரும் நடிகை ஜெயந்தி, எழுத்தாளர் சித்தலிங்கையா, சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மோகன் சாந்தனகவுடர் உள்பட 32 முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானத்தை தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

பொருளாதார ரீதியாக பாதிப்பு

  கா்நாடகத்தில் கடந்த 6 மாதங்களில் முக்கிய பிரமுகர்கள் பலர் மரணம் அடைந்து நம்மை விட்டு விலகி சென்றுவிட்டனர். குறிப்பாக சி.எம்.உதாசி எம்.எல்.ஏ. எங்கள் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். அவர் இந்த சபைக்கு 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார். மிக எளிமையான அரசியல்வாதி. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். அவர் தனது தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார். ஏழை மக்களின் நலனுக்காக பாடுபட்டார். அதே போல் மரணம் அடைந்த 32 முக்கிய பிரமுகர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மேலும் அவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.

  கொரோனா மற்றும் வெள்ளத்தால் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இதனால் அவர்களின் குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் இருந்து நாம் மீண்டும் மீண்டும் முன்னேறி செல்ல வேண்டியது அவசியம்.
  இவ்வாறு அவர் பேசினார்.

  அதன் பிறகு இரங்கல் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

நேர்மை குறைந்துவிட்டது

  கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து 6 மாதங்கள் ஆகின்றன. இந்த காலக்கட்டத்தில் அரசியல், சமூக, இலக்கியம், விளையாட்டு துறையை சேர்ந்த முக்கியமான பிரமுகர்கள் 32 பேர் மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் இந்த சபையின் உறுப்பினராக இருந்த பா.ஜனதாவை சேர்ந்த சி.எம்.உதாசி எளிமையான அரசியல்வாதி. அவர் 10-ம் வகுப்பு தான் படித்திருந்தார். ஆனால் அவர் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, துளு உள்பட 7 மொழிகளை பேசும் திறன் கொண்டவராக இருந்தார். ஆங்கிலமும் சரளமாக பேச கற்றுக் கொண்டார்.

  6 முறை எம்.எல்.ஏ.வாகவும், மந்திரியாகவும் பணியாற்றியவர். எடியூரப்பாவுக்கு நெருக்கமாக இருந்தார். முன்னாள் சபாநாயகர் ஸ்ரீகிருஷ்ணா நேர்மையான அரசியல்வாதி. அவர் மந்திரியாகவும் பணியாற்றினார். அவர் ஏழை மக்களுக்கு சேவையாற்றினார். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். நாங்கள் 2 பேரும் ஒரே இடத்தில் வக்கீல் தொழில் செய்தவர்கள். 2013-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுப்பதாக நான் கூறினேன். ஆனால் அவர், அரசியலில் நேர்மை குறைந்துவிட்டது, ஊழல் அதிகரித்துவிட்டது அதனால் எனக்கு டிக்கெட் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

கர்நாடகத்தின் உரிமை

  உத்தரபிரதேச முதல்-மந்திரியாக பணியாற்றிய கல்யாண்சிங், 9 முறை அந்த மாநில சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அவர் ஏழை மக்களின் நலனுக்காக பாடுபட்டார். காவிரியில் கர்நாடகத்தின் உரிமைக்காக மாதேகவுடா தனது வாழ்க்கையின் கடைசி வரை போராடினார். 6 முறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய அவர் மந்திரியாகவும் செயல்பட்டார். 2 முறை எம்.பி.யாகவும் பணியாற்றினார்.

  சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி, காந்தியவாதி. சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் தனது வாழ்க்கையின் இறுதிகாலம் வரை ஏழை மக்களுக்காக குரல் கொடுத்தார். நிலமற்றவர்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். எக்காரணம் கொண்டும் அவர் தனது போராட்டத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டார். நக்சலைட்டுகளை மனம் மாற்ற முயற்சி செய்தார். சிலரை மனம் மாற்றி நான் முதல்-மந்திரியாக இருந்தபோது என்னிடம் அழைத்து வந்து பேசினார். மரணம் அடைந்த 32 பேரின் ஆத்மா சாந்தி அடைய நான் வேண்டுகிறேன்.
  இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இரங்கல் தீர்மானம்

  அதைத்தொடர்ந்து ஜனதா தளம் (எஸ்) கட்சியின் துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட பல்வேறு உறுப்பினர்கள் பேசினர். அதன் பிறகு இரங்கல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். 

அதே போல் மேல்-சபையிலும் மரணம் அடைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு இறந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

எடியூரப்பாவுக்கு கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கீடு

முதல்-மந்திரியாக பணியாற்றிய எடியூரப்பா கடந்த ஜூலை மாதம் கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்று பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, சட்டசபையில் ஆளுங்கட்சி பக்கத்தில் முதல் வரிசையில் அமர்ந்து பணிகளை கவனித்தார். 

முதல்-மந்திரி பதவி போன பிறகு, எடியூரப்பாவுக்கு ஆளுங்கட்சி பக்கத்தில் முதல்-மந்திரி அமரும் இடத்தில் இருந்து 4-வது வரிசை அதாவது கடைசி வரிசையில் 2-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் சாதாரண எம்.எல்.ஏ.க்களை போல் அமர்ந்து சபை நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தார். அவரால் மந்திரி ஆக்கப்பட்டவர்கள் அவருக்கு முன் வரிசை இருக்கைகளில் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்