சேலத்தில் பட்டப்பகலில் துணிகரம்: கொரோனா தடுப்பூசி போட வந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு-ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கைவரிசை

சேலத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.

Update: 2021-09-13 21:37 GMT
சூரமங்கலம்:
சேலத்தில் கொரோனா தடுப்பூசி போட வந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.
பட்டபகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
இளம்பெண்
சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ஹேமாவதி (வயது29), இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முடிவு செய்தார். அதற்காக நேற்று முன்தினம் சுப்பிரமணியநகரில் நடந்த சிறப்பு முகாமுக்கு சென்றார். அங்குள்ள தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக தனது காரில் ஏற சென்றார். அப்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார்சைக்கிளில் மர்மநபர் ஒருவர், ஹேமாவதி அருகில் வந்தார். அப்போது ஹேமாவதி சுதாகரிப்பதற்குள் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை அந்த நபர் பறித்தார்.
தப்பி சென்றார் 
ஹேமாவதி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அதற்குள் அந்த நபர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று மறைந்தார். இதுகுறித்து ஹேமாவதி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் அந்த நபரின் உருவம் பதிவாகி உள்ளதா? அல்லது அந்த நபர் வந்த மோட்டார் சைக்கிள் எண் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
பரபரப்பு
பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர், ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்