தாவரவியல் பூங்காவில் ரூ.3 லட்சம் மலர் செடிகள் விற்பனை

முழு ஊரடங்குக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ரூ.3 லட்சம் மலர் செடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-09-14 16:41 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர், அலங்கார செடிகள் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு அலங்கார செடிகள் ஒன்று ரூ.10, அழகாக தொங்க விடும் செடியுடன் கூடிய பூந்தொட்டி ரூ.110, மூலிகை செடிகள் ஒன்று ரூ.10, கேக்டஸ் மற்றும் சக்குலன்ட் வகை அழகு செடிகள் ஒன்று ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் பால்சம், பிகோனியா, ஜெரேனியம், கார்னேசன், கோலிஸ், டன்சிங் டால் உள்பட 50 ரகங்களை சேர்ந்த மலர் செடிகள் விற்பனைக்கு உள்ளது.இதனை வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி சென்று வீடுகளில் வளர்க்கின்றனர்.

 கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு  அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. 

சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், பூங்காவில் மலர், அலங்கார செடிகள் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் செடிகள் தேக்கம் அடைந்தன. இருப்பினும் பணியாளர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

4 மாதங்களுக்கு பின்னர் கடந்த மாதம் 23-ந் தேதி சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் விற்பனை நிலையத்தில் மலர், அலங்கார செடிகளை பார்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான ரகங்களை வாங்கி செல்கின்றனர். இதனால் முழு ஊரடங்குக்கு பின்னர் மலர் செடிகள் விற்பனை மீண்டும் நடந்து வருகிறது. 

இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறும்போது,
முழு ஊரடங்கால் மலர் செடிகள் விற்பனை பாதிக்கப்பட்டது. தற்போது தினமும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மலர், அலங்கார செடிகள் விற்பனையாகி வருகிறது. 

முழு ஊரடங்குக்கு பிறகு ரூ.3 லட்சம் மதிப்பில் மலர் செடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலை வளாகத்திலும் செடிகள் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

மேலும் செய்திகள்