தோட்டக்கலை மானிய திட்டங்களுக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு

விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை மானிய திட்டங்களுக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் டி.மோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-14 17:41 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் இந்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு நடப்பாண்டு பொருள் இலக்காக 1,255 எக்டரும், நிதி இலக்காக ரூ.4 கோடியே 8 லட்சமும் இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உயர் தொழில்நுட்ப நாற்றாங்கால், புதிய பரப்பு விரிவாக்கம், தனியார் நீர் சேகரிப்பு அமைப்பு, பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறைகள் (நிழல்வலைக்குடில், நிலப்போர்வை), மண்புழு உற்பத்தி கூடாரம், தேனீ வளர்ப்பு, இயந்திர தளவாடங்கள் (பவர்டில்லர், பவர்வீடர், மினி டிராக்டர்) அறுவடைக்கு பின்சார் மேலாண்மை திட்டம் (சிப்பம் கட்டும் அறை), நடமாடும் விற்பனை வண்டி ஆகிய இனங்களின் கீழ் தோட்டக்கலைத்துறைக்கு பொருள், நிதி இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயன்பெறலாம்

எனவே மேற்கண்ட இனங்களில் மானியம் பெறுவதற்கு விவசாயிகள், தொடர்புடைய அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விவசாய நிலத்திற்கான கணினி சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் (தேசிய மயமாக்கப்பட்ட வங்கி) ஆகியவற்றுடன் அணுகி விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்