சணல் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்த போலீசார்

முத்துப்பேட்டையில், பறிமுதல் செய்யப்பட்ட சணல் வெடிகுண்டுகளை போலீசார் செயல் இழக்க செய்தனர்.

Update: 2021-09-14 18:17 GMT
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில், பறிமுதல் செய்யப்பட்ட சணல் வெடிகுண்டுகளை போலீசார் செயல் இழக்க செய்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
சணல் வெடிகுண்டு
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வியாபாரத்திற்காக 2019-ம் ஆண்டு அனுமதியில்லாமல் ஒரு இடத்தில் சணல் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது. அப்போது அங்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார், சணல் வெடிகுண்டுகள், வெடிக்க பயன்படுத்தும் திரி மற்றும் புஸ்வாணம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மண் குடுவை, ஒலக்கை வெடி ஆகியவற்றை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை போலீசார் பாதுக்காத்து வந்தனர். அதனை செயலிழக்க செய்ய உயர் போலீசார் அதிகாரிகள் உத்தரவிட்டனர். 
வெடிக்க செய்தனர்
அதன் அடிப்படையில் நேற்று முத்துப்பேட்டைக்கு வந்த திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் அழகேசன் முன்னிலையில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்த வெடி பொருட்களை எடுத்து சென்று, முத்துப்பேட்டை கோவிலூர் பைபாஸ் சாலையோரம் உள்ள திடலில் பள்ளம் வெட்டி சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து அவற்றை வெடிக்க செய்து செயல் இழக்க செய்தனர். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் முத்துப்பேட்டையில் இருந்து வந்த தீயணைப்பு வாகனமும் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்