பணி நீட்டிப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்;ராமநாதபுரம் மாவட்ட நூலகர் கைது

ஊரக நூலகரின் பணி நீட்டிப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் மாவட்ட நூலகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-14 18:48 GMT
ராமநாதபுரம்,

ஊரக நூலகரின் பணி நீட்டிப்புக்கு  ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் மாவட்ட நூலகர் கைது செய்யப்பட்டார்.

பணி நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ளது மல்லல் கிராமம். இந்த கிராமத்தில் ஊரக நூலகத்தில் தற்காலிக நூலகராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார். இவர் தனது தற்காலிக பணியை நீட்டிப்பு செய்யும்படி ராமநாதபுரம் மாவட்ட மைய நூலக (பொறுப்பு) அலுவலர் கண்ணனிடம் தெரிவித்துள்ளார்.அதற்கு கண்ணன் ரூ.30 ஆயிரம் கொடுத்தால் பணி நீட்டிப்பு வழங்குவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் இறுதியாக ரூ.5 ஆயிரம் கொடுத்தால் பணி நீட்டிப்பு செய்து தருவதாக கண்ணன் தெரிவித்தாராம்.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

இதுகுறித்து செந்தில்குமார் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை செந்தில்குமார் நேற்று பிற்பகலில், மாவட்ட நூலகத்தில் வைத்து கண்ணனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு ேபாலீஸ் துணை சூப்பிரண்டு உன்னி கிருஷ்ணன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் உள்ளே புகுந்து கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணி நீட்டிப்பு செய்வதற்கு ஊரக நூலகரிடம் ரூ.5 ஆயிரம் வாங்கி, ராமநாதபுரம் மாவட்ட நூலகர் ைகதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்