என்ஜினீயருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற என்ஜினீயருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2021-09-14 19:46 GMT
கடலூர், 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்தவர் பிரகாசம் மகன் நவீன்குமார் (வயது 30). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர். 
இதற்கிடையில் அந்த பெண் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் கல்லூரியில் தங்கி எம்.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். 
இந்தநிலையில் அந்த மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் பேசி பழகி வந்தார். ஆனால் இது நவீன்குமாருக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது.

ஆபாசமாக பேசினார்

இதனால் அவர் மாணவியை சந்தேகப்பட்டு பேசினார். இதை அறிந்த அந்த மாணவி, நவீன்குமாருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதில் மனவேதனை அடைந்த நவீன்குமார் கடந்த 30.4.2018 அன்று மாணவியை தேடி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அவர் தங்கி இருந்த விடுதிக்கு வந்தார். பின்னர் விடுதிக்கு வெளியே நின்று அவரை செல்போனில் அழைத்தார். அதற்கு அவர் வர மறுத்தார். பின்னர் நீண்ட நேரம் கழித்து வெளியே வந்தார்.
இதையடுத்து இருவரும் விடுதிக்கு வெளியே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த மாணவியை சந்தேகப்பட்டு நவீன்குமார் ஆபாசமாக பேசினார். இதைத்தொடர்ந்து அந்த மாணவி அங்கிருந்து புறப்பட்டார். உடன் நவீன்குமார் நீ என்னுடன் பேசவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று தான் கையில் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இருப்பினும் அவர் கண்டு கொள்ளாமல் நடந்து சென்றார்.
 கொலை செய்ய முயற்சி
இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் நவீன்குமார் மீது கல் வீசி தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 2 பேரும் அங்கேயே ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். தகவல் அறிந்ததும் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அங்கு படுகாயமடைந்து கிடந்த 2 பேரையும் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் போலீசார் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் நவீன்குமார் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

10 ஆண்டு சிறை தண்டனை

இது பற்றிய புகாரின் பேரில் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நவீன்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார்.
அவர் தனது தீர்ப்பில், மாணவியை ஆபாசமாக பேசிய நவீன்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மாணவியை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். 
இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்