முகநூலில் பெண் போல் பழகி என்ஜினீயரிடம் பண மோசடி

முகநூலில் பெண் போல் பழகி என்ஜினீயரிடம் பண மோசடி செய்த தஞ்சை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-14 20:45 GMT
திண்டுக்கல்: 

முகநூலில் நட்பு 
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 30). என்ஜினீயர். இவருக்கு முகநூலில், ஒரு பெண் அறிமுகம் ஆனார். இருவரும் நண்பர்களாக பழகியதால் தகவல்களை பரிமாறி கொண்டனர். மேலும் அந்த பெண் இனிமையான குரலில் முகநூல் மெசென்ஜரில் குரல் பதிவுகளை அனுப்பினார். இந்த நிலையில் தனது தாயாருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி, அந்த பெண் பணம் கேட்டுள்ளார்.


இதனால் மனமிறங்கிய அருண்குமார், அவருக்கு உதவி செய்ய முன்வந்தார். இதையடுத்து அந்த பெண் தனது வங்கி கணக்கு எண்ணை அனுப்பி, அதில் பணத்தை செலுத்தும்படி தெரிவித்தார். அதன்பேரில் அருண்குமார் 3 தவணைகளாக மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலுத்தினார். இதற்கிடையே அருண்குமாருக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது.

பெண் போல் பழகி மோசடி
இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் முகநூல் கணக்கு குறித்து விசாரித்தார். அப்போது தன்னிடம் பெண்போல் பழகியது ஒரு ஆண் என்பது தெரியவந்தது. முகநூலில் பெண் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி, பெண் குரலில் பேசி மோசடி செய்ததை அறிந்து அருண்குமார் அதிர்ச்சி அடைந்தார். 
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம், அருண்குமார் புகார் செய்தார். 

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ரெய்கானா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், தஞ்சை புதிய பஸ்நிலையம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (29) என்பவர் பெண்போல் பழகி மோசடி செய்ததை கண்டுபிடித்தனர். அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்