நடைபயிற்சிக்கு அழைத்து சென்ற போது வளர்ப்பு நாய் இழுத்து சென்றதால் ஏரியில் தவறி விழுந்து புதுப்பெண் பலி

சிவமொக்கா அருகே நடைபயிற்சிக்கு அழைத்து சென்ற போது வளர்ப்பு நாய் இழுத்துச் சென்றதால் ஏரியில் தவறி விழுந்து புதுப்பெண் பலியான பரிதாபம் நடந்துள்ளது.

Update: 2021-09-14 21:33 GMT
சிவமொக்கா:

புதுப்பெண்

  சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா உலிகல் கிராமத்தை சேர்ந்தவர் நிஷ்மிதா(வயது 26). இவருக்கும், தீர்த்தஹள்ளி தாலுகா கைமராவை சேர்ந்த மஞ்சுநாத்துக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நிஷ்மிதா கணவர் வீ்ட்டில் வசித்து வந்தார்.

  மஞ்சுநாத்தின் வீட்டில் நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. வளர்ப்பு நாயை, நிஷ்மிதா காலையில் வெளியே நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த 11-ந்தேதி காலை நிஷ்மிதா, நாயை வெளியே அழைத்து சென்றார். அவர், நாயின் கழுத்தில் கட்டிய இரும்பு சங்கிலியை பிடித்து அழைத்து சென்றார்.

ஏரியில் விழுந்து சாவு

  கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஏரிக்கரையோரம் சென்று கொண்டிருக்கும் போது திடீரென நாய், சங்கிலியுடன் தரதரவென இழுத்து கொண்டு ஓட ஆரம்பித்தது. இதனை எதிர்பாராத நிஷ்மிதா ஏரியில் கால்தவறி விழுந்து நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு யாரும் இல்லாததால் ஏரியில் மூழ்கி நிஷ்மிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதற்கிடையே நாய், வீட்டிற்கு திரும்பி வந்துள்ளது. அப்போது நிஷ்மிதா வராமல் நாய் மட்டும் வீட்டிற்கு வந்ததை குடும்பத்தினர் பார்த்தனர். நீண்டநேரமாகியும் நிஷ்மிதா வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், நிஷ்மிதாவை அக்கம் பக்கம் தேடிபார்த்து வந்தனர்.

சோகம்

  இந்த நிலையில் மறுநாள் ஏரியில் நிஷ்மிதாவின் உடல் மிதப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ஏரிக்கு சென்ற குடும்பத்தினர் நிஷ்மிதாவின் உடலை பார்த்து அவரது கணவர், குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த ஆகும்பே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்த நிஷ்மிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  போலீஸ் விசாரணையில், வளர்ப்பு நாய், கட்டப்பட்ட சங்கிலியை தரதரவென இழுத்து ஓடியதால் ஏரியில் விழுந்து புதுப்பெண் நிஷ்மிதா பலியானது தெரியவந்தது. இதுகுறித்து ஆகும்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்