செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் துரத்தியதால் கிணற்றில் விழுந்து விவசாயி பலி

வாழப்பாடி அருகே செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் துரத்தியதால் கிணற்றில் விழுந்து விவசாயி பலியானார்.

Update: 2021-09-14 22:11 GMT
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் துரத்தியதால் கிணற்றில் விழுந்து விவசாயி பலியானார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி
கள்ளக்குறிச்சி மாவட்டம் எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன் ராஜா (வயது 28). விவசாயி. இவருக்கும், செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. 
செம்மரக்கட்டை கடத்திய பணத்தை பங்கு போடுவதில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன், கணேசன், செல்வம், தர்மன் உள்ளிட்ட சிலருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கருமந்துறை அருணா கிராமத்துக்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ராஜா வந்திருந்தார். அப்போது அங்கு வந்த சீனிவாசன் தலைமையிலான கும்பல் ராஜாவை காரில் கடத்தியது.
கிணற்றில் விழுந்து பலி
வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே இரவு காரில் இருந்து இறங்கி ராஜா தப்பி ஓடினார். இதனால் செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் அவரை துரத்தியது. இருட்டில் வழி தெரியாமல் ஒரு தோட்டத்துக்குள் ஓடினார். அங்கு கிணறு இருப்பது தெரியாததால், அதில் ராஜா தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 70 அடி ஆழ கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து தோட்டத்தில் இருந்தவர்கள், பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் ராஜாவை துரத்தி வந்த கும்பலை சேர்ந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வாழப்பாடி போலீசார் விரைந்து வந்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். 
தனிப்படை
விசாரணையில் அவர்கள் கருமந்துறையை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக், வாழப்பாடியை சேர்ந்த திலீப், ஜீவா ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் வாழப்பாடி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி கிணற்றில் இருந்து ராஜாவின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவரது சாவிற்கு காரணமான செம்மரக்கட்டை கடத்தல் கும்பலை சேர்ந்த சீனிவாசன், கணேசன், தர்மன், செல்வம் உள்ளிட்டோரை பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 
செம்மரக்கட்டை கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிக்க முயற்சித்த விவசாயி, கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறந்துபோன விவசாயி ராஜாவிற்கு, பிரியா என்ற மனைவியும், திருப்பதி, தனுஷ், பிரவீன் என 3 மகன்களும், பிரியங்கா (4) என்ற மகளும் உள்ளனர். ராஜாவின் மனைவி மற்றும் குழந்தைகள், உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

மேலும் செய்திகள்