ஓமலூரில் இருந்து ஆத்தூருக்கு லாரியில் கடத்தப்பட்ட 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-4 பேர் கைது

ஓமலூரில் இருந்து ஆத்தூருக்கு லாரியில் கடத்தப்பட்ட 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-14 22:40 GMT
கொண்டலாம்பட்டி:
ஓமலூரில் இருந்து ஆத்தூருக்கு லாரியில் கடத்தப்பட்ட 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து ஆத்தூருக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கொண்டலாம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயசீலகுமார் தலைமையில் போலீசார் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை போலீசார் நிறுத்தினர். இதையடுத்து அந்த லாரியில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டிரைவர் உள்பட லாரியில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
10 டன் பறிமுதல்
விசாரணையில் அவர்கள் சேலம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் மாயக்கண்ணன் (வயது 26), அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த சதீஷ்குமார் (25), யுவராஜ் (22), கொண்டலாம்பட்டியை சேர்ந்த நாராயணன் (36) ஆகியோர் என்பதும், அவர்கள் ஓமலூரில் இருந்து ஆத்தூருக்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் 50 கிலோ எடை கொண்ட 180 மூட்டைகளில் இருந்த 10 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்