கூடலூர் அருகே மாட்டை புலி அடித்து கொன்றது

கூடலூர் அருகே மாட்டை புலி அடித்து கொன்றது

Update: 2021-09-18 15:08 GMT
கூடலூர்

கூடலூர் அருகே மாட்டை புலி அடித்து கொன்றது. இதுதொடர்பாக வனத்துறையினரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாட்டை அடித்து கொன்ற புலி

கூடலூர் பகுதியில் அடிக்கடி காட்டு யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து பொதுமக்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர்.

ஸ்ரீமதுரை ஊராட்சி அம்பலமூலா பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம்போல மாடுகளை வீட்டின் முன்பு கட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாட்டின் சத்தம் கேட்டு ராஜன் வெளியே வந்தார். அப்போது புலி ஒன்று அங்கிருந்து ஓடியதை கண்டார். மேலும் வீட்டின் முன்பு கட்டிருந்த காளை மாடு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. இதனால் காளை மாட்டை புலி அடித்து கொன்றது தெரியவந்தது.

கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

உடனடியாக இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று காலை 8 மணிக்கு நேரில் வந்து உயிரிழந்த மாட்டை பார்வையிட்டனர்.

அப்போது ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பலமூல பகுதியில் இதுவரை 6 மாடுகளும், கோழி கண்டிப்பகுதியில் 3 மாடுகள் என 9-க்கும் மேற்பட்ட மாடுகளை புலி அடித்து கொன்று விட்டது. 

தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கூண்டு வைத்து புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

வனத்துறையினர் சிறைபிடிப்பு

இதைக்கேட்ட வனத்துறையினர் உயரதிகாரிகளின் ஒப்புதல் பெற்று கூண்டு வைக்கப்படும். மேலும் உயிரிழந்த காளை மாட்டுக்கு இழப்பீடு தொகையை விரைவாக வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதை கிராம மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் வனத்துறையினரும் அங்கிருந்து செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களை தடுத்த கிராம மக்கள் வனத்துறையினர் மற்றும் அவர்கள் சென்ற வாகனத்தை சிறைபிடித்தனர். மேலும் உடனடியாக கூண்டு வைத்து புலியை பிடித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

தகவலறிந்து வந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் மற்றும் முதுமலை கார்குடி வனச்சரகர் விஜயன் தலைமையிலான வனத்துறையினரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பகல் 12 மணிக்கு உயிரிழந்த காளை மாட்டுடன் தொரப்பள்ளி பஜாரில் சாலை மறியல் செய்யப்போவதாக கிராம மக்கள் அறிவித்தனர். 

இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் தொலைபேசியில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூண்டு வைக்க நாளை (திங்கட்கிழமை) வரை கால அவகாசம் வழங்க வேண்டும். உயரதிகாரிகளின் ஒப்புதல் பெற்று புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மதியம் 12.30 மணிக்கு முற்றுகை போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். 

கேமரா பொருத்தி கண்காணிப்பு

தொடர்ந்து அம்பலமூல பகுதியில் வனத்துறையினர் தானியங்கி கேமராக்களை பொருத்தி புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

 முன்னதாக முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த காளை மாட்டின் உடலை பரிசோதித்தனர். அப்போது புலி கடித்து மாடு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்