கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு தலையில் கல்லைப்போட்டு தோட்ட காவலாளி கொலை தம்பி மகன் கைது

கிருஷ்ணகிரி அருகே தலையில் கல்லைப்போட்டு தோட்ட காவலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தம்பி மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-09-18 19:29 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே தலையில் கல்லைப்போட்டு தோட்ட காவலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தம்பி மகனை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தோட்ட காவலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் செம்படமுத்தூர் அருகே மிட்டபாறை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 83). இவர் மாதேப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மாந்தோப்பில் பல ஆண்டுகளாக காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பெருமாளின் தம்பி மகன் அப்பாபுலி என்பவர் அந்த தோட்டத்தில் மாடுகள் மேய்த்து வந்தார். மேலும் தோட்டத்தில் உள்ள கோழிகளையும் திருடி வந்ததாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து காவலாளி பெருமாள் தோட்டத்தின் உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தோட்டத்தில் மாடுகள் மேய்க்க கூடாது என செல்வம், அப்பாபுலியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் சொந்த பெரியப்பாவான பெருமாள் மீது அப்பாபுலி கோபத்தில் இருந்தார். 
கல்லை போட்டு கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த அப்பாபுலி தோட்டத்தில் காவலுக்கு இருந்த பெருமாளை கடுமையாக தாக்கினார். மேலும் பெருமாளின் தலையில் கல்லைப்போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். நீண்டநேரமாகியும் பெருமாள் வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு பலத்த காயங்களுடன் அவர் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உறவினர்கள் பெருமாளை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாக குடிபோதையில் அப்பாபுலி தனது பெரியப்பாவை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தாலுகா போலீசார் அப்பாபுலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்