நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட குதிரை, வாகனம் மோதி சாவு

நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட குதிரை வாகனம் மோதி செத்தது.

Update: 2021-09-18 19:51 GMT
பெரம்பலூர்:
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் நேற்று காலை 2 குதிரைகள் சாலையை கடந்து சென்றன. அப்போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற ஒரு வாகனம் ஒரு குதிரையின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் நெடுஞ்சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்ட அந்த குதிரை பரிதாபமாக செத்தது. இதனை கண்ட மற்றொரு குதிரை கண்ணீர் வடித்தவாறு செத்து கிடந்த குதிரையின் அருகே நின்றது, காண்போரை கண்கலங்க வைத்தது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தில் இறந்த குதிரை சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர் ஒருவர் நேர்த்திக்கடனாக வழங்கியதும், அந்த குதிரை கோவிலில் நிற்காமல் வெளியே சுற்றித்திரிந்து வாகனத்தில் அடிபட்டு செத்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவாச்சூர் ஊராட்சி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உதவியுடன் போலீசார் இறந்த குதிரையை, நெடுஞ்சாலையோரத்தில் அடக்கம் செய்து இறுதி மரியாதை செலுத்தினர். மற்றொரு குதிரை சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று விடப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் எது? என்றும், அதனை ஓட்டிச் சென்றவர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்