கரூரில் இடியுடன் கூடிய மழை

கரூரில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

Update: 2021-09-19 18:49 GMT
கரூர்,
பலத்த மழை
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்றும் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்தநிலையில்  இரவு 7 மணியளவில் கருமேகங்கள் ஒன்று திரண்டு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடியுடன் கூடிய மழையாக மாறியது.
கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரமாக மழை நீடித்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். இந்த மழையால் கரூர் மேற்கு பிரதட்சணம் ரோடு, வடக்கு பிரதட்சணம் ரோடு, ராமகிருஷ்ணாபுரம் மெயின் ரோடு, ஜவகர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.
அரவக்குறிச்சி, க.பரமத்தி
அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5.30 மணியளவில் திடீரென மேகக்கூட்டங்கள் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, கரடிப்பட்டி, தடாகோவில், மலைக்கோவிலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இரவு 7 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
க.பரமத்தி, சின்னதாராபுரத்தை சுற்றியுள்ள எலவனூர் ஊராட்சி, புஞ்சை காளிகுறிச்சி ஊராட்சி, நஞ்சைகாளி குறிச்சி ஊராட்சி, ராஜபுரம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5 மணியளவில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் வரை மழை நீடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தது. மேலும் இரவு முழுவதும் ஒருசில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
வேலாயுதம்பாளையம், நொய்யல்
வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம் கூலக்கவுண்டனூர், காகிதபுரம், மூர்த்திபாளையம், செம்படம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதியில் மாலை 6 மணியளவில் பலத்த காற்று வீசியது. இதில், டி.என்.பி.எல். சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் டி.என்.பி.எல். ஆலைக்கு செல்ல வேண்டிய சரக்கு லாரிகள் செல்ல முடியாமல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அந்த மரம் அகற்றப்பட்டு லாரிகள் சென்றன. இரவு 7 மணியளவில் இடியுடன் பலத்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
நொய்யல், குறுக்குச்சாலை, அண்ணாநகர், அத்திப்பாளையம், குப்பம், உப்புபாளையம், புன்னம்சத்திரம், மூலிமங்கலம், முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், தவிட்டுப்பாளையம், பாலத்துறை, திருக்காடுதுறை, புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 7.30 மணியளவில் மழை பெய்தது.

மேலும் செய்திகள்