மது போதையில் பயணிகளை அவதூறாக பேசிய ரெயில்வே ஊழியர் இடைநீக்கம்

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பணியின் போது மது போதையில் இருந்த ஊழியர், பயணிகளை அவதூறாக பேசியதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2021-09-19 21:57 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பணியின் போது மது போதையில் இருந்த ஊழியர், பயணிகளை அவதூறாக பேசியதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ரெயில்வே ஊழியர்
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் கெபின் டிட்ஸ் (வயது 33). இவர் நேற்று முன்தினம் மாலை டிக்கெட் கவுண்டருக்கு டிக்கெட் எடுக்க வந்த பயணிகளை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதை பார்த்த பயணிகள் கெபின் டிட்ஸ் நடவடிக்கைகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து வந்து கெபின் டிட்சை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. எனவே கெபின் டிட்சை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது கெபின் டிட்ஸ் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
பணி இடைநீக்கம்
இதனையடுத்து கெபின் டிட்சை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் கெபின் டிட்சை ரெயில்வே அதிகாரிகள் நேற்று பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர் மது போதையில் பயணிகளை அவதூறாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்