கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-20 19:03 GMT
கரூர்
தீக்குளிக்க முயற்சி
கரூர் மாவட்டம், வெள்ளியணை, தேவேந்திர நகரை சேர்ந்த சரஸ்வதி மற்றும் அவரது 13 சிறுமி மற்றும் 10 வயது சிறுவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா அவரது 2 வயது ஆண் குழந்தை ஆகிய 2 குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் திடீரென பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெய்யை தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். 
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றியும் காப்பாற்றினர். பின்னர் அவர்களை போலீசார் விசாரணைக்காக தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மிரட்டல்
இவர்கள் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த 2 பேரிடம் தனித்தனியாக நாங்கள் கடன் வாங்கி இருந்தோம். அதற்கு வட்டி கட்டி வந்தோம், ஒரு கட்டத்தில் வட்டி கட்ட முடியாமல் போனது. இதனால் அரசால் எங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை கடன் வாங்கியவர்களிடம் கொடுத்து விட்டோம். 
பின்னர் ரொக்கப்பணத்தை பெற்று கொண்டு வீட்டுமனை பட்டாவை தாருங்கள் என கடன் வாங்கியவர்களிடம் கூறினோம்.ற்கு அவர்கள் வீட்டுமனை பட்டாவை திரும்ப கொடுக்க முடியாது என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே எங்கள் வீட்டுமனை பட்டாவை திரும்ப பெற்று தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
செவிலியர்கள் மனு
கரூர் தற்காலிக செவிலியர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், நாங்கள் கொரோனா காலத்தில் தமிழக அரசின் கீழ் 3 மாத கால ஒப்பந்த அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் கோவிட் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தோம். தற்போது 3 மாத காலம் நிறைவடையும் முன்னரே எங்களை பணியில் இருந்து விடுவித்தார்கள். எனவே எங்களை (44 செவிலியர்கள்) பணி நீட்டிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்