பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக மோதல்; 2 பேர் கைது

மானூர் அருகே பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக நடந்த மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-21 21:12 GMT
மானூர்:
மானூர் அருகே உள்ள கட்டாரங்குளத்தை சேர்ந்தவர் சுடலை மகன் வேல்முருகன் (வயது 28). இவரது உறவினர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் வேல்முருகன் தான் வசிக்கும் பகுதியில் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த வேதநாயகம் (35), குமார் என்ற சிவக்குமார் (37), இசக்கிமுத்து (40), வேல்சாமி (46) ஆகிய 4 பேரும் சேர்ந்து, வேல்முருகனை வழிமறித்து சாதி பெயரை சொல்லி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை தாக்கி, அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.8 ஆயிரத்து 300 மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த வேல்முருகன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் மானூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் வழக்குப்பதிவு செய்து, குமார், இசக்கிமுத்து ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்