3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டில் தீர்ப்பு

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற முன்னாள் விமானப் படை அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-09-22 17:41 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற முன்னாள் விமானப் படை அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. 
குடும்ப தகராறு
ராமநாதபுரம் மகாசக்திநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்பவரின் மகன் சந்திரசேகர் (வயது64). விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் ராமநாதபுரம் வங்கியில் காசாளராக பணியாற்றி கடந்த 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரின் மனைவி சாவித்ரி (50). 
இவர்களுக்கு அபிசேஸ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அபிசேஸ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பிருந்தாவன் கார்டன் பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவரின் மகள் பவானிக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த னர். இதுதொடர்பாக சந்திரசேகர் தரப்பினருக்கும் வீராசாமி தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனது மகள் வாழாமல் உள்ளதற்கு சந்திரசேகர் தான் காரணம் என்று வீராசாமி ஆத்திரத்தில் இருந்து வந்தாராம்.
நடைபயிற்சி 
இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி அதிகாலை 5 மணிஅளவில் சந்திரசேகர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் நண்பர்களுடன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். டி.பிளாக் அருகில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்களை முந்தி சென்ற வெள்ளை நிற கார் ஒன்று முன்னால் சென்று வழிமறித்து நின்றுள்ளது. அதில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் ஓடி வந்து சந்திரசேகரை கத்தி, கம்பியால் சரமாரியாக தாக்கி குத்தி படுகாயப்படுத்திவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர்.
கொலை
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி துடித்துக் கொண்டிருந்த சந்திரசேகரை அவருடன் வந்த நண்பர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆஸ்பத்திரியில் சில நிமிடங்களில் சந்திரசேகர் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் பற்றி அறிந்த சந்திரசேகரின் மனைவி சாவித்ரி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துஇருளாண்டி மகன் வீராசாமி (55), வாலாந்தரவை ரெயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் அருண்குமார் (25), சடையன்வலசையை சேர்ந்த ஆனந்தன் மகன் அருண்பாண்டி (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியை கொலை செய்த வழக்கில் மேற்கண்ட 3 பேருக்கும் ஆயுள்தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்