டிரைவர்-கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்

அரசு டவுன் பஸ்சில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த வழக்கில் டிரைவர்-கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-22 20:16 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் அருகே நேற்று முன்தினம் மதியம் சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததில் குன்னம் தாலுகா, கார்குடி காலனி தெருவை சேர்ந்த முருகன் மனைவி பேச்சியம்மாள் (வயது 65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய பெரம்பலூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத கூடத்தில் வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் பேச்சியம்மாள் ஓடும் பஸ்சில் முன்பக்க படிக்கட்டில் நின்று எச்சில் துப்ப முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்தாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
உடலை வாங்க மறுத்து சாலை மறியல்
இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கூடியிருந்த பேச்சியம்மாளின் குடும்பத்தினர், உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்களரசு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பேச்சியம்மாளின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை, அவரது உடலை வாங்க மாட்டோம் என்று திடீரென்று பெரம்பலூர்-துறையூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், அரசு டவுன் பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பேச்சியம்மாள் படிக்கட்டில் நின்று பயணம் செய்தபோது, டிரைவர் திடீரென்று பிரேக் பிடித்ததாலும், கண்டக்டர் கவனக்குறைவாலும் பஸ்சில் இருந்து பேச்சியம்மாள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
டிரைவர்-கண்டக்டர் மீது நடவடிக்கை 
இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், போலியாக புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே விபத்துக்கு காரணமான டிரைவர், கண்டக்டர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேச்சியம்மாள் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு தொகையும், ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றனர். 
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகசேன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 


மேலும் செய்திகள்