பில்லி-சூனியம் எடுப்பதாக பெண்களிடம் ரூ. 80 லட்சம் மோசடி

பில்லி-சூனியம் எடுப்பதாக கூறி 3 பெண்களிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மோசடி செய்த பணத்தில் சொகுசு பங்களா கட்டி வசித்தது விசாரணையில் தெரியவந்தது.

Update: 2021-09-26 10:25 GMT
தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோணியம்மாள் (வயது 41) மற்றும் கற்பகம் (35). இவர்கள் இருவரும் தங்கள் கணவர்களை பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். கற்பகத்தின் தங்கை அனிதா (29). இவர், குடும்ப பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.

இதையறிந்த மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த பாத்திமா (40), அவருடைய தம்பி அபுஹசன் (35), தங்கை ரஹமது பீவி நிஷா(29), அபு ஹசனின் நண்பர் ராஜேந்திரன் (41) ஆகியோர் அந்தோணியம்மாள், கற்பகம் மற்றும் அனிதா ஆகியோருக்கு யாரோ பில்லி-சூனியம் வைத்திருப்பதாகவும், இதனால்தான் உங்கள் கணவர்கள் பிரிந்து வாழ்கின்றார்கள், குடும்பத்தில் பிரச்சினைகளும் ஏற்படுவதாக கூறினர்.

ரூ.80 லட்சம் பெற்றனர்

அந்த சூனியத்தை மந்திரம் செய்து எடுத்துவிட்டால் மீண்டும் அந்தோணியம்மாள், கற்பகம் இருவரும் தங்கள் கணவர்களுடன் ஒன்று சேர்ந்து வாழலாம். அனிதாவின் குடும்ப பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் எனவும் ஆசை வார்த்தைகள் கூறினர். இதற்காக எலுமிச்சை பழம், பூசணிக்காய், பொம்மைகள் வைத்து பூஜை செய்வதுபோல் நடித்தனர்.

இவ்வாறு கடந்த ஒரு ஆண்டாக 3 பேரையும் ஏமாற்றி தவணை முறையில் அந்தோணியம்மாளிடம் ரூ.30 லட்சம், கற்பகத்திடம் ரூ.30 லட்சம், அனிதாவிடம் ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சத்தை ஏமாற்றி பெற்று உள்ளனர்.

4 பேர் கைது

இந்தநிலையில் பாத்திமா மற்றும் அவரது கூட்டாளிகள் பில்லி-சூனியம் எடுப்பதாக கூறி தங்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்ததை அறிந்த அந்தோணியம்மாள், கற்பகம் மற்றும் அனிதா ஆகிய 3 பேரும் இதுபற்றி தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாத்திமா, அவருடைய தம்பி அபுஹசன், தங்கை ரஹமது பீவி நிஷா மற்றும் ராஜேந்திரன் ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சொகுசு பங்களா

கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இவர்களிடம் மோசடி செய்த பணத்தில் இரும்புலியூர், சந்திரன் நகர், பாத்திமா தெருவில் இடம் வாங்கி சொகுசு பங்களா கட்டி, அதில் தற்போது பாத்திமா தனது குடும்பத்துடன் வசித்து வருவது தெரிந்தது.

மேலும் இதேபோல பாத்திமா மற்றும் அவரது கூட்டாளிகள் 10-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்