கூலித்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை கார் டிரைவர் கைது

கூலித்தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-26 11:03 GMT
சென்னை,

சென்னை கே.கே.நகர் டாக்டர் அம்பேத்கர் நகர் குடிசை பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 35). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி நாகவள்ளியிடம் அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் தீபக்குமார் (25) சகஜமாக பேசி வந்தார். இது காளிமுத்துவுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவருக்கும், தீபக்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நாகவள்ளியும், தீபக்குமாரும் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் சிரித்துப்பேசி கொண்டிருந்ததாக தெரிகிறது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த காளிமுத்து, தீபக்குமாரை தாக்கினார். பதிலுக்கு அவரும் தாக்கினார். இவர்கள் மோதலை அப்பகுதி மக்கள் விலகிவிட்டனர்.

கத்தியால் குத்திக்கொலை

பின்னர் காளிமுத்து இரவில் மதுபோதையில் வந்து தீபக்குமாருடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த தீபக்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காளிமுத்துவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த காளிமுத்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் தீபக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீபக்குமார் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். தீபக்குமார் மீது எம்.ஜி.ஆர். நகர், குமரன் நகர் போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 4 அடிதடி வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்