கைது செய்ய சென்ற போலீசாரை கண்டதும் விக்கிரவாண்டி கொலை குற்றவாளி தற்கொலை முயற்சி

கைது செய்ய சென்ற போலீசாரை கண்டதும் விக்கிரவாண்டி கொலை குற்றவாளி தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-09-26 17:31 GMT
விருத்தாசலம், 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சிட்டிசன் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் மகன் அலாவுதீன் (வயது, 34). இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தார். பரோல் காலம் முடிந்த பின்னர், அவர் சிறைக்கு திரும்பி செல்லவில்லை. 

இதையடுத்து அவரை போலீசார் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அலாவுதீன், அவரது மாமியார் வீடான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புதுப்பேட்டையில் இருப்பதாக விழுப்புரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

மயங்கி விழுந்தார்

இதையடுத்து போலீசார் புதுப்பேட்டைக்கு விரைந்தனர். அங்கு மாமியார் வீட்டில் இருந்த அலாவுதீனை போலீசார் கைது செய்து, தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றினர். சிறிது தூரம் சென்றதும் அலாவுதீன் வாகனத்திலேயே மயங்கி விழுந்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை உடனடியாக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது.

 இதன் பின்னர் தான், தன்னை கைது செய்ய வருவதை அறிந்து அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. 
விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும், பின்னர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

 அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்