விஷம் குடித்து விவசாயி தற்கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

உடையார்பாளையம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-26 20:17 GMT
உடையார்பாளையம்:

விவசாயி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த இடையார் ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 62). விவசாயியான இவர் உடையார்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவரின் தேவைக்காக அதே ஊரை சேர்ந்த சங்கர் மூலம் மேலக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரிடம் கடன் வாங்கி, செந்திலிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது நடராஜன் கடனாக கொடுத்த பணத்தை சுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து சுப்பிரமணியன், பணத்தை கேட்க செந்தில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது செந்தில் தலைமறைவாக இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுப்பிரமணியன் சம்பவத்தன்று வீட்டில் விவசாய நிலத்திற்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.
தற்கொலை
இதைக்கண்ட உறவினர்கள், சுப்பிரமணியனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்பிரமணியன், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கந்து வட்டி கேட்டதால், சுப்பிரமணியன் உயிரிழந்ததாக கூறி, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சிலால் & உடையார்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஏந்தல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்