பேரம்பாக்கத்தில் பயன்பாடின்றி கிடக்கும் காவல் உதவி மையம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பேரம்பாக்கத்தில் பயன்பாடின்றி கிடக்கும் காவல் உதவி மையம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2021-09-27 12:45 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தில் இருந்து தினந்தோறும் திருவள்ளூர், கடம்பத்தூர், பூந்தமல்லி, சென்னை, தக்கோலம், காஞ்சீபுரம் அரக்கோணம், திருப்பதி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு 30-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பேரம்பாக்கத்தில் பொதுமக்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். மேலும் சார்பதிவாளர் அலுவலகம், துணை மின் நிலையம், தீயணைப்பு நிலையம், தபால் நிலையம், கூட்டுறவு பால் கொள்முதல் நிலையம், கூட்டுறவு வங்கி, வேளாண்மை அலுவலகம் என 20-க்கு மேற்பட்ட தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளது.

இந்த நிலையில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கவும், தடுக்கவும், போக்குவரத்தை சீர் செய்யவும் போலீசார் சார்பில் பேரம்பாக்கம் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த புறக்காவல் நிலையம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு காவல் உதவி மையம் என மாற்றியமைக்கப்பட்டது.

தற்போது இந்த காவல் உதவி மையத்தில் போலீசார் முக்கிய நாட்களில் மட்டுமே வந்து செல்கின்றனர். இதன் காரணமாக பேரம்பாக்கம் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் மற்றும் போக்குவரத்தை சீர் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த காவல் உதவி மையம் பயன்பாடு இல்லாமல் உள்ளது.

எனவே காவல் உதவி மையத்தை சீரமைத்து போலீசார் தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்