கமல்ஹாசன் தத்தெடுத்த ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கமல்ஹாசன் தத்தெடுத்த ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

Update: 2021-09-28 14:11 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட இன மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சியை திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தத்து எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த தி.மு.க.ஆட்சியின்போது 2010-ம் ஆண்டு இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரையிலும் அவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் நரிக்குறவர் இன குடியிருப்பு பகுதியில் மின்சார வசதி, சாலை மற்றும் குடிநீர் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று திடீரென திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் இது தொடர்பான மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்