மைசூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.30½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

மைசூரில் இருந்து திருச்சிக்கு காய்கறி மூட்டைகளுக்கு அடியில்வைத்து கடத்தப்பட்ட ரூ.30½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-09-28 19:45 GMT
மலைக்கோட்டை, செப்.29-
மைசூரில் இருந்து திருச்சிக்கு காய்கறி மூட்டைகளுக்கு அடியில்வைத்து கடத்தப்பட்ட ரூ.30½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
புகையிலை பொருட்கள்
தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி மாநகரில் உள்ள பல கடைகளில் புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைத்து வருகிறது. போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் எவ்வளவு தான் நடவடிக்கை எடுத்தாலும், புகையிலை பொருட்களை விற்பனையை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து திருச்சிக்கு வரும் காய்கறி வாகனங்களில் புகையிலை பொருட்கள் மூட்டை, மூட்டையாக கடத்தி வரப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காா்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, தீவிர வாகன தணிக்கை செய்து அவற்றை கண்டறிய மாநகர போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர போலீசார் அனைத்து பகுதிகளிலும் நேற்று காலை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையில் மாநகர தனிப்படை போலீசாரும், திருச்சி மாநகர நெடுஞ்சாலை 1-வது ரோந்து போலீசாரும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு சரக்கு வாகனம் காய்கறி மூட்டைகளுடன் வந்தது.
காய்கறி மூட்டைக்கு அடியில் பதுக்கல்
அந்த வாகனத்தை மறித்த போலீசார், அந்த வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் 25 மூட்டை முட்டைகோஸ் மற்றும் வெள்ளரி பழ மூட்டைகள்அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் போலீசார் அந்த மூட்டைகளை கீழே இறக்கி சோதனை செய்தனர்.
அப்போது, காய்கறி மூட்டைகளுக்கு அடியில் மூட்டை, மூட்டையாக ரூ.30½ லட்சம் மதிப்புள்ள சுமார் 1 டன் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த வாகனத்தையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து கோட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவந்தனர்.
4 பேர் கைது
மேலும் அந்த வாகனத்தை  ஓட்டி வந்த மைசூருவை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 26), சோமுசேகர் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த புகையிலை பொருட்களை காந்திமார்க்கெட்டில் இறக்கி, அங்கிருந்து தஞ்சாவூர் சாலை, அரியமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று அவர்கள் வினியோகிக்க இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், இவற்றை வாங்க காத்திருந்த கம்பரசம் பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (50), அவருடைய அண்ணன் முத்து (55) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கமிஷனர் ஆய்வு
மேலும் இதுபற்றி தகவலறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உடனடியாக கோட்டை போலீஸ் நிலையம் வந்து, பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பார்வையிட்டார். அத்துடன் இவற்றை எங்கு இருந்து கொண்டு வருகிறார்கள்?, எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்று தீவிர விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் மாநகரில் கஞ்சா, புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்