தைல மரத்தோப்பில் காயங்களுடன் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி அருகே தைலமரத்தோப்பில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-09-29 11:43 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அடுத்த பில்லாகுப்பம் கிராமத்தில் உள்ள தைலமரதோப்பில் நேற்று அழுகிய நிலையில் ஆண்பிணம் கிடப்பதாக குலுவராஜகண்டிகை கிராம நிர்வாக அதிகாரி உதயா கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் 45 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யார்? என்பது அடையாளம் தெரியவில்லை. சுமார் 5 நாட்களுக்கு முன்பு அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அவரது உடலில் பல பகுதிகளில் காயம் இருந்ததும், உடலில் துணி ஏதுமின்றி இருந்ததும் போலீசாருக்கு கொலையா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் 4 நாட்களுக்கு மேலாக தைலமரத்தோப்பில் உடல் கிடந்ததால் காட்டு பன்றிகளாலும், நரிகளாலும் உடலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

கொலையா?

இருப்பினும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த நபர் வந்திருப்பது பலவித சந்தேகங்களை போலீசாருக்கு ஏற்படுத்தி உள்ளது. அங்கு அந்த நபர் ஏன் வரவேண்டும்?. வடமாநிலத்தவர் போல தோற்றம் அளிக்கும் அவரை யாரேனும் கடத்தி கொலை செய்து தைலமரத்தோப்பில் வீசி விட்டு சென்றனரா? என்பதும் தெரியவில்லை.

சம்பவ இடத்தில் இருந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு முழுவிவரம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சந்தேக சாவாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பில்லாகுப்பம் மற்றும் அதனையொட்டிய சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளில் வசித்து வரும் வடமாநில தொழிலாளர்கள் யாரேனும் கடந்த சில நாட்களாக மாயமானார்களா? என்கிற கோணத்திலும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்