960 மதுபாட்டில்கள் பறிமுதல்; 2 பேர் கைது

சுரண்டையில் 960 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2021-09-29 19:55 GMT
சுரண்டை:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சுரண்டை அருகே சேர்ந்தமரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வென்றிலிங்கபுரம் அய்யனார் கோவில் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல் பாண்டியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரை பிடித்தனர். விசாரணையில், புதுகிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்த தங்கையா மகன் அண்ணாதுரை (வயது 42), வேட்டரம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த போத்திக்கண்ணு மகன் பாண்டியராஜா (31) ஆகியோர் என்பதும், காட்டுப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 960 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்