பூண்டி பஸ் நிலையத்தில் மாதா சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு

பூண்டி பஸ்நிலையத்தில் மாதா சிலை உடைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-01 12:20 GMT
ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பஸ் நிலையத்தில் 15 அடி உயர மாதா சிலை உள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் இங்கு பிரார்த்தனை செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் மாதா சிலையின் தலையை மட்டும் உடைத்து எடுத்து சென்றுவிட்டனர். காலை 5 மணி அளவில் பஸ் நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் மாதா சிலையின் தலை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதுகுறித்து அவர்கள் புல்லரம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பூண்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மாதா சிலையை உடைத்தவர்கள் குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்