சின்னக்கல்லார் பகுதியில் காட்டு யானைகள் முகாம்

சின்னக்கல்லார் பகுதியில் காட்டு யானைகள் முகாம்;

Update:2021-10-04 19:29 IST
வால்பாறை

வால்பாறை அருகே சின்னக்கல்லார் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் அங்கு செல்ல சுற்றுலா செல்ல வனத்துறையினர் தடைவிதித்து உள்ளார்கள்.

முக்கிய சுற்றுலாத்தலம்

கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா மையமாக திகழ்கிறது. இதனால் கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக வெளிமாநிலங்களிலும் இருந்து அதிகஅளவில் வந்து செல்கிறார்கள். 
இந்தநிலையில் வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் திடீர் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் அடிக்கடி தடை விதிக்கப்படுவது இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆற்றில் ஒருசிலர் அடித்து செல்லப்பட்டு உள்ளனர். இதனால் கூழாங்கல் ஆற்றுப்பகுதியை வனத்துறையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மேலும் அங்கு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருந்தது. 

குளிக்க தடை

இந்தநிலையில் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்தனர். அங்கு தற்போது மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது மூடுபனியும் நிலவி வருகிறது. இதமான காலசூழ்நிலை நிலவுவதால் இதனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் நின்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர். 
மேலும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தற்போது மழை பெய்து வருவதால் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி போலீசார் கூழாங்கல் ஆற்றில் குளிப்பதற்கு தடை விதித்தனர். 
இதனால் குடும்பத்துடன் வந்தவர்கள் கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளிக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அப்போது அங்கு சாலையோரங்களில் இருந்த கடைகளில் தின்பண்டங்களை வாங்கி சுற்றுலாப்பயணிகள் சாப்பிட்டனர்.


முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

இதேபோல் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லார் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் சின்னக்கல்லார் பகுதிக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். வால்பாறை பகுதிக்கு வந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணியாமல் வந்தனர். அவர்களுக்கு வால்பாறை போலீசார் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

மேலும் செய்திகள்