வைகை அணை நீர்மட்டம் 54 அடியாக உயர்வு

தேனி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்தது.

Update: 2021-10-05 12:39 GMT
ஆண்டிப்பட்டி: 

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. மொத்த உயரம் 71 அடி. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர்வரத்து காரணமாகவும் கடந்த ஜூன் மாதம் 68 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் முதல்போகம் மற்றும் ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

 இந்நிலையில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்தது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு நீர்வரத்தாக இருந்தது. நீர்வரத்து குறைவான நிலையில், அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து 53 அடியாக குறைந்தது. 

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வைகை அணைக்கு வினாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 1,859 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 54.33 அடியாக உயர்ந்தது.  அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 719 கனஅடியாக குறைக்கப்பட்டது.  

மேலும் செய்திகள்