மதுரகாளியம்மன் உபகோவில்களில் சாமி சிலைகள் உடைப்பு

மதுரகாளியம்மன் உபகோவில்களில் சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்தனர்.

Update: 2021-10-06 20:05 GMT
பெரம்பலூர்:

மூலஸ்தான கோவில்
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு அருகே, அந்த கோவிலின் தல வரலாற்றின்படி மூலஸ்தான கோவிலான பெரியசாமி மலை கோவில் உள்ளது. இந்த கோவிலில் செல்லியம்மன் எழுந்தருளியுள்ளார்.
மதுரகாளியம்மன் கோவிலின் பூஜையின்போது, மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவதற்கு முன்பாக பூசாரி, செல்லியம்மன் குடியிருக்கும் பெரியசாமி மலை கோவில் திசையை நோக்கி தீபாராதனையை காட்டியபிறகே, மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டுவது வழக்கம். மதுரகாளியம்மன் கோவிலில் எந்த திருவிழா நடந்தாலும், முதல் மரியாதை செல்லியம்மனுக்குத்தான் கொடுக்கப்படுவது வழக்கம்.
சிலைகள் உடைப்பு
இந்நிலையில் நேற்று காலை சிறுவாச்சூர் பெரியசாமி மலை கோவிலுக்கு வழக்கம்போல் சாமி கும்பிட பக்தர்கள் சென்றனர். அப்போது கோவிலில் உள்ள சுடுகளிமண்ணால் செய்யப்பட்ட பெரியசாமி சிலையின் தலையில் பரிவட்டம், இடது கையில் இருந்த பாதுகாப்பு கேடயம், செல்லியம்மன் சிலை, 2 கொங்கானி கருப்பு சிலைகளின் வலது கையில் இருந்த கத்திகள், 4 சாத்தடையார் சிலைகளின் வலது கையில் இருந்த கத்திகள், 2 பாப்பாத்தியம்மன் சிலைகள், புலி வாகனம் ஒன்று ஆகியவை உடைக்கப்பட்டு, சேதமடைந்து கிடந்ததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பெரியசாமி மலை கோவில் அருகே உள்ள செங்கமலையார் கோவிலில் சப்த கன்னிமார்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் என அங்குள்ள 14 சாமி சிலைகளில் 5 சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவலறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும், பெரம்பலூர் போலீசாரும் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் இரவில் மர்மநபர்கள் கோவிலில் புகுந்து சாமி சிலைகளை உடைத்து, சேதப்படுத்தி விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மனின் உபகோவில்களான பெரியசாமி, செங்கமலையார் கோவில்களில் சாமி சிலைகள் மர்மநபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்