ஆபரேஷன் தாமரை குறித்து ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பாடம் நடத்தப்பட்டதா? - பா.ஜனதாவுக்கு, குமாரசாமி கேள்வி

ஜனநாயக நடைமுறையை அழிக்கும் ஆபரேஷன் தாமரை குறித்து ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பாடம் நடத்தப்பட்டதா? என்று பா.ஜனதாவுக்கு குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2021-10-06 21:15 GMT
பெங்களூரு:

புத்தகம் படித்தால் போதாது

  ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த 4 ஆயிரம் பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக பணி பெற்றுள்ளதாக குமாரசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

  ஆர்.எஸ்.எஸ். குறித்து நான் கூறிய சில தகவல்களுக்கு பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பதில் அளித்துள்ளார். வீட்டில் உட்கார்ந்து புத்தகம் படித்தால் போதாது என்று அவர் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். குறித்து ஆய்வு, ஆராய்ச்சி செய்ய அந்த அமைப்பின் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று எனக்கு, சி.டி.ரவி அழைப்பு விடுத்துள்ளார். உங்களின் அமைப்பை அருகில் இருந்து பார்த்தவர் எழுதிய புத்தகத்தை படித்து, அங்கு நடைபெறும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டுள்ளேன்.

தாண்டவமாடும் ஊழல்

  நான் அந்த அமைப்பில் சேர்ந்தால், இன்னும் எவ்வளவு உண்மைகள் தெரியவரும் என்பதை நீங்கள் சற்று யோசித்து பாருங்கள். ஒரு சார்பாக நடந்து கொள்ளுதல், ஊழல், குடும்ப அரசியல் பற்றி நீங்கள் பேசியுள்ளீர்கள். உங்கள் கட்சி மற்றும் ஆட்சியில் தாண்டவமாடும் ஊழல், குடும்ப அரசியல், ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளுதல் போன்றவை குறித்தும் நீங்கள் பேச வேண்டும்.

  அதற்கும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தான் பயிற்சி வழங்கப்பட்டதா?, ஜனநாயக நடைமுறையை அழிக்கும், ஆபரேஷன் தாமரை என்ற மிக மோசமான அரசியல் குறித்தும் அந்த அலுவலகத்தில் தான் பாடம் நடத்தப்பட்டதா? என்று நீங்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சிவமொக்காவில் ரூ.2 ஆயிரம் நிவாரணம் பெற லஞ்சம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டிற்கு நல்லதல்ல

  மக்களின் கஷ்டங்களை தீர்ப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் உங்களுக்கு எதுவும் சொல்லி கொடுப்பது இல்லையா?. சேவை என்ற பெயரில் அமைப்புகள் அரசியல் செய்யக்கூடாது. மக்களின் கஷ்டங்களை தீர்க்கும் வகையில் செயல்பட வேண்டுமே தவிர வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.

  ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டதில் இருந்து அந்த அமைப்பு என்னென்ன செய்துள்ளது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மக்கள் பிரதிநிதிகள், அரசுகள், ஆட்சி நிர்வாக எந்திரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்வது நாட்டிற்கு நல்லதல்ல. இதை சி.டி.ரவி புரிந்துகொள்ள வேண்டும்.
  இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்