சோள வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு; தந்தை- மகன் மீது வழக்கு

சோள வியாபாரியை தாக்கி பணம் பறித்த தந்தை- மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-10-07 21:48 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). இவர் விவசாயிகளிடம் இருந்து சோளம் கொள்முதல் செய்து வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யும் முகவராக செயல்பட்டு வருகிறார். கோட்டியால் பாண்டிபஜார் அருகே கண்ணன் என்பவருடைய வயலில் விளைந்த சோளத்தை விலைக்கு வாங்குவதற்காக அதன் தரத்தை சோதிக்க முருகேசன் சென்றுள்ளார். அதிக ஈரப்பதமாக இருந்ததால் சோளத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது விவசாயி கண்ணன் மற்றும் அவருடைய மகன் விமல் ஆகியோர் முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாகவும், அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், முருகேசன் கையில் வைத்திருந்த ரொக்கம் ரூ.27 ஆயிரம் மற்றும் அவருடைய செல்போனை கண்ணன் பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த முருகேசன் ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் கண்ணன், விமல் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்