இடி, மின்னலுடன் பலத்த மழை

இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Update: 2021-10-10 21:04 GMT
பெரம்பலூர்:

பலத்த மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வானம் கருமேகத்துடன் காட்சியளித்தது. இந்நிலையில் பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 7.15 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
சுமார் 1½ மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலையில் வெள்ளம்போல் கரைபுரண்டு ஓடியது.
ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து
மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. ஏற்கனவே பெய்த மழையினாலும், நேற்று பெய்த மழையினாலும் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பெய்த மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மழை அளவு விவரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
எறையூர்-70, லெப்பைக்குடிகாடு-53, வி.களத்தூர்-40, அகரம்சீகூர்-20, கிருஷ்ணாபுரம்-5, புதுவேட்டக்குடி-4, தழுதாழை-4, வேப்பந்தட்டை-3, பெரம்பலூர்-2.

மேலும் செய்திகள்