ஒரே நாளில் 4 வீடுகளில் நகை- பணம் திருட்டு

ஒரே நாளில் 4 வீடுகளில் நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2021-10-10 21:05 GMT
பாடாலூர்:

தந்தை- மகள் வீடுகள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 57). விவசாயியான இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் மாவிளங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ¼ பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
இதேபோல் பெருமாளின் வீட்டையொட்டியுள்ள அவரது மகள் காமாட்சி வீ்ட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ½ பவுன் தங்க மோதிரம், ஆயிரத்து 500 ரூபாய் திருட்டு போயிருந்தது. வீடுகளில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அரிசி மூட்டைகள்
இதேபோல் அருகே உள்ள தங்கேஸ்வரன் (55) என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கேரளாவிற்கு சென்றிருந்தார். அவரது வீட்டின் பூட்டையும் மர்மநபர்கள் உடைத்துள்ளனர். இது குறித்து தங்கேஸ்வரனுக்கு அக்கம், பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தங்கேஸ்வரன் வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த ½ பவுன் தங்க காசு மட்டும் திருட்டு போயிருந்தது. வீட்டில் மறைத்து வைத்திருந்ததால் 20 பவுன் நகை தப்பியது.
மேலும் அடைக்கம்பட்டி வெள்ளாளர் தெருவில் வசிக்கும் மருதபிள்ளை (60) வீட்டை பூட்டிவிட்டு அருகே துக்க வீட்டிற்கு சென்றிருந்தார். அவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், துக்க காரியத்திற்காக வீட்டில் இருந்த தலா 25 கிலோ அடங்கிய 5 அரிசி மூட்டைகளையும் மற்றும் ஆயிரத்து 500 ரூபாயையும் திருடி சென்றனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மேற்கண்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே கிராமத்தில் நடந்த திருட்டு சம்பவங்கள் அந்தப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்