செங்கம் அருகே 3 வயது சிறுவன் ஓடை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பலி

செங்கம் அருகே 3 வயது சிறுவன் ஓடை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பலியானான். பாலம் கட்டாததை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-11 17:40 GMT
செங்கம்

செங்கம் அருகே 3 வயது சிறுவன் ஓடை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பலியானான். பாலம் கட்டாததை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சிறுவன் பலி

செங்கம் அருகே உள்ள தீத்தாண்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 32). இவரது மனைவி ரேகா (28). இவர்களுக்கு குணால் (2) மற்றும் சற்குணன் (3) என்ற 2 மகன்கள் உண்டு. தீத்தாண்டப்பட்டு அருகே உள்ள ஓடையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தண்ணீர் ஓடுகிறது. பொதுமக்கள் இந்த ஓடையை கடந்து செல்ல வேண்டியிருப்பதால் ஓடையில் பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

 இந்தநிலையில் நேற்று முன்தினம் தாமோதரனின் மகன் சற்குணன் எதிர்பாராதவிதமாக ஓடை தண்ணீரில் சிக்கி அடித்து செல்லப்பட்டு ஓடையின் ஒரு பகுதியில் உள்ள முள் வேலியில் சிக்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டான்.

சாலை மறியல்

ஓடையில் பாலம் கட்டாததால்தான் தண்ணீரில் சற்குணன் அடித்துச் செல்லப்பட்டதாகவும், பல அதிகாரிகளிடம் கூறியும் ஓடையில் பாலம் கட்டாததை கண்டித்தும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி திட்ட முகமை உதவி இயக்குனர் லட்சுமிநரசிம்மன் உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. 

பின்னர் சற்குணன் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்