நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி கறம்பக்குடியில் விவசாயிகள் சாலைமறியல்; போலீசாருடன் தள்ளு-முள்ளு 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி கறம்பக்குடியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-11 18:36 GMT
கறம்பக்குடி:
நெல் கொள்முதல் நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கரு.கீழத்தெரு ஊராட்சியை சேர்ந்த குரும்பிவயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி பனையாவயல், திருமுருகபட்டினம், மஞ்சக்காடு, ஈச்சன்விடுதி, அரங்குள மஞ்சுவயல் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 250 ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை முடியும் நிலையில் உள்ளது. 
குரும்பிவயல் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதனால் இந்த ஆண்டும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் கடந்த ஒரு மாதமாக விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை ஏற்கனவே கொள்முதல் நிலையம் செயல்பட்ட இடத்தில் குவித்து வைத்தனர். 
ஆனால் மற்ற பகுதிகளில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட போதும், குரும்பிவயலில் திறக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அங்கு குவித்து வைத்திருந்த நெல்மணிகள் முளைக்க தொடங்கியது. 
சாலை மறியல் 
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, தாசில்தார் விஸ்வநாதன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
போலீசாருடன் தள்ளு-முள்ளு
இதற்கிடையே கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பஸ்கள் திருமணஞ்சேரி சாலையில் திருப்பி விடப்பட்டன. இதையறிந்த பெண்கள் மற்றும் விவசாயிகள் அங்கு ஓடி சென்றும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது. வாகனங்கள் 3 புறங்களில் அணிவகுத்து நின்றன. சில விவசாயிகள் சாலையில் படுத்து புரண்டனர். பெண் விவசாயிகள் ஆவேசமாக குரல் எழுப்பியபடி கோஷம் போட்டனர். அப்போது போலீசார் மறியலில் ஈடுபட்ட சில விவசாயிகளை குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். 
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளு-முள்ளு ஏற்பட்டது. 2 பெண்கள் மயக்கம் போட்டு கீழே விழுந்தனர். 
2 வாலிபர்கள் தீக்குளிக்க முயற்சி 
இந்நிலையில் செல்லசாமி (வயது 23), சந்தோஷ் (24) ஆகியோர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்த போலீசார், அந்த வாலிபர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இவ்வேளையில் அடைக்கலம் (55) என்ற விவசாயி அவரது பையில் வைத்திருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சிமருந்தை (விஷம்) குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்து பெண்கள் கதறி துடித்தனர். உடன் போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 5 மணி நேரத்திற்கு மேல் போராட்டம் தொடர்ந்ததால் பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி நடந்தே தஞ்சாவூர் மாவட்ட எல்லைக்கு சென்று மாற்று பஸ்சில் சென்றனர்.
நெல் கொள்முதல் செய்யப்படும்
இதையடுத்து புதுக்கோட்டை உதவி கலெக்டர் அபிநயா சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாளை (இன்று) முதல் வருகிற 23-ந் தேதி வரை குரும்பிவயலில் நெல் கொள்முதல் செய்யப்படும் எனவும், அதன்பின் கரு.கீழ தெரு ஊராட்சியில் பொதுவான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தார். 
இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், நெல் கொள்முதல் நிலைய கண்காணிப்பு குழுவில் கட்சி சார்பற்ற விவசாயிகளை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 விவசாயிகள் பெட்ரோலை குடித்ததால் பரபரப்பு 
*சாலை மறியல் போராட்டத்திற்காக பெண்கள் மற்றும் விவசாயிகள் டிராக்டர் மற்றும் சரக்கு வேன்களில் வந்தனர். அவர்களை திருமணஞ்சேரி கோவில் அருகேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் வாகனங்களில் இருந்து இறங்கிய விவசாயிகள் மற்றும் பெண்கள் போலீசாரின் தடையை மீறி 4 கி.மீ. நடந்தே போராட்ட இடத்திற்கு வந்தனர்.
*போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிலரை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி வேனில் ஏற்ற முயன்றதை பார்த்த பெண் விவசாயிகள் தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர்.
*தீக்குளிக்க முயன்ற வாலிபர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பாட்டிலில் இருந்த பெட்ரோலை மணி, நாகமுத்து, நாகம்மாள், ரெங்காயி ஆகிய 4 விவசாயிகள் குடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
*மாற்றுப்பாதையில் செல்ல முயன்ற பஸ்சின் முன் வாலிபர் ஒருவர் பாய்ந்து சென்றார். பின் சக்கரத்தின்முன் படுத்து கொண்டார். போலீசார் அவரை போராடி மீட்டனர்.

மேலும் செய்திகள்