கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த தம்பதியால் பரபரப்பு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-11 18:43 GMT
புதுக்கோட்டை:
பட்டா பெயர் மாற்ற விண்ணப்பம்
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக தஞ்சாவூர் மானோஜிப்பட்டியை சேர்ந்த குமார் (வயது 50). அவரது மனைவி சித்ரா (42) ஆகியோர் வந்தனர். அவர்கள் கையில் மண்எண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். 
கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு பட்டாவை பெயர் மாற்றம் செய்து தரக்கோரி விண்ணப்பித்து பல நாட்கள் ஆகியும் ஆணை வழங்கப்படாமல் காலதாமதம் செய்வதாகவும், அதனால் நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளிக்க முயற்சியில் வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து குமார்-சித்ரா தம்பதியை போலீசார் எச்சரித்து கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதித்தனர். கலெக்டரிடம் அவர் கோரிக்கை மனு அளித்தார்.
டாஸ்மாக் கடை
கோட்டைப்பட்டினம் அருகே விருதுவயல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், விருதுவயல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தெரிவித்திருந்தனர்.
புதுக்கோட்டை குறிஞ்சி நகர், ஸ்ரீ பாலாஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், புதுக்கோட்டை நகராட்சி 41-வது வார்டில் தங்கள் பகுதியில் மழைநீர் வடிகாலை தூர்வார வேண்டும், பிள்ளையார் கோவில் குளத்தை தூர்வார வேண்டும் என கூறியிருந்தனர்.
418 மனுக்கள்
இதேபோல கூட்டத்தில் பட்டா மாறுதல், விலையில்லா வீட்டுமனை பட்டா, வங்கிக்கடன் உதவி, பசுமைவீடு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 418 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார்.
முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து பயனாளிக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவித்தொகைக்கான காசோலையினையும் கலெக்டர் கவிதாராமு வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்