பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை

பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழையால் இந்திராநகரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 10 வாகனங்கள் சேதம் அடைந்தன. மேலும் மெஜஸ்டிக் செல்லும் வழியில் உள்ள ரெயில்வே மேம்பால சுவரும் இடிந்து விழுந்ததால் பரபரப்பு உண்டானது.

Update: 2021-10-11 21:12 GMT
பெங்களூரு:

வடகிழக்கு பருவமழை

  கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து விட்டது. அந்த நேரத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. தற்போது கர்நாடகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவமழையின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரில் உள்ள பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வருகிறது. மேலும் பழமையான வீடுகள், சுவர்களும் இடிந்து விழுந்து வருகின்றன.

  இந்த நிலையில் நேற்று மதியம் பெங்களூருவில் கனமழை பெய்தது. குறிப்பாக ராஜாஜிநகர், மெஜஸ்டிக், அனந்தராவ் சர்க்கிள், வெஸ்ட் ஆப் கார்டு ரோடு, கப்பன் பார்க், இந்திரா நகர், விதான சவுதா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

10 வாகனங்கள் சேதம்

  அப்போது இந்திரா நகரில் உள்ள ராணுவ பயிற்சி மைய வளாக சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த சுவரின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது சுவர் விழுந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. இதுபோல சேஷாத்திபுரத்தில் இருந்து மெஜஸ்டிக் செல்லும் வழியில் தன்வந்திரி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தின் அருகே உள்ள பெரிய சுவர் நேற்று இடிந்து விழுந்தது. அந்த சுவரையொட்டி ஒரு வீடும் உள்ளது. அந்த சுவர் மேலும் இடிந்ததால் அந்த வீடும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலையில் விழுந்த மண்ணை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அதிகாரிகள் அகற்றினர். மேலும் சுவரையொட்டி உள்ள வீட்டில் வசித்து வந்த விஜயம்மா மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டில் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றி விட்டனர்.

  அந்த சுவர் இடிந்து விழுந்த இடத்தில் இருந்த 10 அடி தூரத்தில் தான் ரெயில்வே மேம்பாலம் செல்கிறது. அந்த மேம்பாலத்தின் அருகே சுவர் இடிந்து விழுந்து இருந்தால் ரெயில் போக்குவரத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்