சொகுசு விடுதியில் தங்கி இருந்த இரிடியம் மோசடி கும்பல் கைது

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே அக்கரையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ளவர்களை நிறைய பேர் வந்து சந்தித்து செல்வதாகவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Update: 2021-10-12 05:13 GMT
உடனடியாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் சொகுசு விடுதிக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அங்கு தங்கி இருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், மல்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்) தொழில் செய்து பல பேரை ஏமாற்றி வந்த மோசடி கும்பல் என தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமார் (வயது 35), அவரது கூட்டாளிகள் ராஜா (37), மோகனகுமார் (48), சரவணன் (53), பாலகிருஷ்ணன் (43) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இவர்கள், ஜெர்மனி நாட்டில் உள்ள வங்கியில் இரிடியம் வைத்திருப்பதாகவும், அதன்மீது ஒவ்வொருவரும் தலா ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் ஒரு கோடி ரூபாய் வரை கிடைக்கும் என கூறி சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை 18 ஆயிரம் பேரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்களிடம் கொரோனா காலமாக இருப்பதால் இரிடியம் பணம் வரவில்லை என்று கூறி, இதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக அவர்களை ஏமாற்ற அக்கரையில் சொகுசு விடுதியை மாத வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம், 3 கம்ப்யூட்டர்கள், 1 லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்