ஊராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே ஊராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து சாலை மறியல் நடைெபற்றது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Update: 2021-10-12 17:04 GMT
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை அருகே ஊராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து சாலை மறியல் நடைெபற்றது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே மூவலூர் ஊராட்சி உள்ளது. ஆயவலம், மகாதானபுரம் மற்றும் மூவலூர் ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சிக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மூவலூர் பஸ் நிறுத்தம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது. இந்தநிலையில் சேதமடைந்த இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் மகாதானபுரம் கிராமத்தில் தொடங்கியது. இதை ஏற்க மறுத்த கிராம மக்கள், ஏற்கனவே ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ள மூவலூர் பகுதியிலேயே பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தற்காலிகமாக புதிய கட்டிடம் கட்டும் பணி நிறுத்தப்படுவதாகவும், மயிலாடுதுறை தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்