மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; கட்டிட தொழிலாளி பலி

வெள்ளியணை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் கட்டிட தொழிலாளி பலியானார். படுகாயம் அடைந்த அவரது நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-10-12 19:28 GMT
வெள்ளியணை,
கட்டிட தொழிலாளர்கள்
வெள்ளியணை அருகே உள்ள நொச்சிபட்டியை சேர்ந்தவர் கருணாநிதி. இவருடைய மகன் சரவணன் (வயது 25). அதே ஊரை சேர்ந்தவர் முனியப்பன் மகன் சண்முகவேல் (23).
கட்டிட தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை சண்முகவேல் ஓட்டி சென்றார்.
பஸ் மோதியது
வெள்ளியணை அருகே வெடிக்காரன்பட்டி காலனி பகுதியில் சென்றபோது கரூர் செல்லும் அரசு பஸ் எதிர்த்திசையில் வந்துள்ளது. அப்போது பஸ்சும் மோட்டார் சைக்கிளும் ஒன்றை ஒன்று கடந்து செல்ல முற்பட்டபோது பஸ்சின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. 
இதில் சரவணன் மற்றும் சண்முகவேல் ஆகியோர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
தீவிர சிகிச்சை
அங்கு சரவணனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சண்முகவேலுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்