உர குடோனில் பயங்கர தீ விபத்து

ஊட்டியில் நள்ளிரவில் உர குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதில் பொருட்கள் எரிந்து நாசமானது.

Update: 2021-10-13 13:31 GMT
ஊட்டி

ஊட்டியில் நள்ளிரவில் உர குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதில் பொருட்கள் எரிந்து நாசமானது.

நள்ளிரவில் தீ

ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே தனியார் உர குடோன் உள்ளது. அங்கு விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் அந்த உர குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ ரசாயனங்கள் கலந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் பரவியது. இதனால் தீ கொழுந்து விட்டு மள, மளவென எரிந்தது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. 

தண்ணீரை பீய்ச்சியடித்து...

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஊட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி தலைமையில் ஊட்டி அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, 2 வாகனங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் மூலம் அருகே உள்ள குடோனுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் தீ விபத்து ஏற்பட்ட அறைக்குள் சென்று உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அப்புறப்படுத்தியபோது மீண்டும் தீ எரிந்தது. இதனால் தீயை கட்டுப்படுத்துவதில் சவால் ஏற்பட்டது.

விசாரணை

மேலும் ரசாயனம் வெடித்து சிதறியது. தொடர்ந்து 2 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் காலியானது. பின்னர் 5 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, தீயை கட்டுப்படுத்த அதில் நுரை கலந்து பீய்ச்சி அடிக்கப்பட்டது. நேற்று காலை 6 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு 12 மணி முதல் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

இதையடுத்து ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. எனினும் வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரிக்க தடயங்கள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தீ விபத்தில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதமடைந்தன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்