குரு்ம்பூர் அருகே ஆட்டோ மீது பஸ் மோதியதில் 2 பெண்கள் பலி

குரு்ம்பூர் அருகே ஆட்டோ மீது பஸ் மோதியதில் 2 பெண்கள் பலியாகினர்

Update: 2021-10-13 15:42 GMT
தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே ஆட்டோ மீது பஸ் ேமாதிய விபத்தில் 2 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தாய்-மகன் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
கோவிலுக்கு சென்றபோது...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி சிவகாமி (வயது 36). இவர் தன்னுடைய குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று காலையில் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு ஆட்டோவில் புறப்பட்டு சென்றார்.
அந்த ஆட்டோவை ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணிகண்டன் ஓட்டிச் சென்றார். பின்னர் மாலையில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து அனைவரும் ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
பஸ்-ஆட்டோ மோதல்
குரும்பூர் அருகே புறையூர் வளைவில் அவர்கள் திரும்பியபோது, நெல்லையில் இருந்து காயல்பட்டினத்துக்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் ஆட்டோவின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. ஆட்டோவின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் அலறி துடித்தனர்.
2 பெண்கள் பலி
இதில் உடல் நசுங்கிய வெள்ளூரைச் சேர்ந்த சரவணன் மனைவி அமுதா (வயது 48), வல்லநாட்டைச் சேர்ந்த கந்தன் மனைவி மாரிசெல்வி (50) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் ஆட்டோவில் இருந்த சிவகாமி, அவருைடய மகன் மிதுன் (8), முத்துராமலிங்கம் மகன் நளன்ராஜா (7), மகள் மஞ்சு (6), டிரைவர் சுப்பிர மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
7 பேர் படுகாயம்
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குரும்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்படுகிறது.
இறந்த அமுதா, மாரிசெல்வி ஆகிய 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்